ஆழ்கடலில் அலைகளும், இருள்களும் - சுனாமியால் நாம் கற்க வேண்டிய படிப்பினை...
24:40 அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்.
அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். (இப்படி)
பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை
வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை
ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.
பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள் , ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.
இப்படி ஒவ்வொரு தொலைவிலும் ஒவ்வொரு வண்ணம் தடுக்கப்படும் போது அந்த ஒளியைப் பொறுத்த வரை ஒரு இருள் ஏற்படுகிறது. எந்த இடத்தில் அனைத்து வண்ணங்களும் முழுமை யாகத் தடுக்கப்படுகின்றதோ அந்த இடத்துக்குநிகரான இருள் வேறு எதுவும் இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். கடலுக்குள் ஆயிரம் மீட்டர் செல்லும் போது கண்கள் தடுமாறுகின்றன. இறுதியில் நிறங்கள் அடியோடு மறைந்து விடுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வரும் இரவுகளை என்னால் கருப்பு என்று கூற முடியாது. அந்த அளவுக்கு இருளைக் கடல் அடைந்து விடுகிறது' அமெரிக்க ஆய்வாளர் பீப் என்பவர் கூறுகிறார்.
இருள்களில் பல படித்தரங்கள் உள்ளன என்பதும், பூமியின் மேற் பரப்பில் இரவில் ஏற்படும் இருளை விட, பட்டப் பகலில் 1000 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் சென்றால் கடுமையான இருள் ஏற்படும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.தமது வாழ்நாளில் கடல் பயணமே செய்யாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1000 மீட்டர் ஆழத்திற்குச் சென்று அந்த இருள்களை அனுபவித்து உணர்ந்தவர் போல் இந்த வசனத்தைக் கூறியிருப்பது, குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. மேலும் இவ்வசனத்தில் கடலின் ஆழத்திலும் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது. இந்த வசனம் அருளப் பட்ட காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை ஆழ்கடலுக்கு உள்ளே அலைகள் இருப்பதை மனிதன் கண்டறியவில்லை.
சுனாமியால் ஜப்பான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட போது, ஒரு பனை மரத்தின் உயரத்திற்கு அலைகள் எழும்புவதைக் கண்டனர். பூமியின் மேற்பரப்பில் உள்ள அலைகள் அதிக தூரத்திற்குச் செல்ல முடியுமே தவிர பனை மர உயரத்திற்கு மேலே செல்ல முடியாது என்பதால் இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டனர். இவை கடலுக்கு மேற்புறம் இருந்து பார்த்தால் தெரியாதவாறு கடலுக்கு அடியில் அலைகள் ஏற்படுகின்றன. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் பயணிக்கும் சக்தி படைத்த இந்த அலைகள் கடற்கரைப் பகுதிகளை நெருங்கியதும் மோதி பயங்கரமாக ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ளவற்றை அழிக்கின்றன. சுனாமி அலைகள் சுமார் 50 அடி உயரம் வரை எழும்பி கடற்கரையைக் ஒட்டியுள்ள நிலப்பரப்பில் சுமார் ஒரு மைல் தொலைவு வரை கடல்நீரை வீசி அடிக்கும் சக்தி படைத்தவை.
தற்போது நம் நாட்டுக் கடற்கரையைத் தாக்கிய சுனாமி அலைகள் சுமார் 25 அடி உயரம் எழும்பியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரைக்கு அருகில் கடல் பூகம்பங்கள் நிகழ்ந்தால் சுனாமி அலைகள் சுமார் 10 நிமிடம் கரையைத் தாக்கும் அபாயம் உள்ளது. கடலின் ஆழத்திலும் பிரமாண்ட மான அலைகள் உள்ளன. அந்த அலைகள், தரையிலிருந்து விமானம் கிளம்புவது போல் சீறிக் கிளம்புவதால் தான் பனை மர உயரத்திற்கு அது மேல் நோக்கி வர முடிகின்றது என்று கண்டுபிடித்தனர்.ஆழ் கடலுக்கு உள்ளேயும் பேரலைகள் உள்ளன என்ற இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது மேலும் நிரூபணமாகின்றது.
சுனாமியும் இதனால் நாம் கற்க வேண்டிய படிப்பினைகள் என்ன என்பதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
- Thanks to www.onlinepj.com
No comments:
Post a Comment