Monday, 5 August 2013

நபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா?

மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது.

மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவிப்பு செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாக காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.

இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல் நிறைந்த கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

நம்முடைய  இஸ்லாமிய சகோதரர்கள் இந்தச் செயலுக்கு மார்க்கத்தில் அங்கீகாரம் உண்டா? நாம் எதைச் சொல்கிறோம்? இந்தச் சொல் சரியானதா? என்று நினைத்துப் பார்க்காமல் மனம் சொல்வதையெல்லாம் சொல்­ விடுகின்றனர்.

மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞர்கள் கூட தவறான வாசகங்களை உபயோகித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். மக்கள் நேர்வழி பெறுவதும் வழி கெடுவதும் மார்க்க அறிஞர்கள் கையில் தான் இருக்கின்றது. எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ''எனது உம்மத்தில் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களை நான் பயப்படுகின்றேன்'' என்று கூறினார்கள்.

எனவே மக்கள் தவறாக விளங்கி செயல்படுவதற்கு இவர்களே காரணமாகவும் அமைந்து விடுகின்றார்கள். இவ்வாறு, சொல்வதை விளங்காத காரணத்தினால் தான் மவ்­லித் போன்ற பித்அத்தான காரியங்கள் தோன்றின.

இன்னும் சிலர் பெருமானாரின் பிரியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்தக் கூடாத, மார்க்கம் தடுத்த சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் இந்த வார்த்தைகளைச் சொல்பவர்கள் (அதன் பொருளை உணராவிட்டாலும்) இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்களாகி விடுகின்றனர்.

இதுபோன்ற தொடர்களில் உள்ளது தான் ''இறைவா! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும் நினைவிலும் காணும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!'' எனும் வாக்கியமாகும்.

கனவின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு மனிதரை நாம் நேரில் பார்த்திருந்தால் தான் அவரைக் கனவிலும் பார்க்க முடியும். அப்படியிருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காமல் அவர்களைக் கனவில் காண வேண்டும் என்பது அபத்தமான விஷயமாகும். அப்படியே காண முடியும் என்று வைத்துக் கொண்டாலும், வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  தான் என்று எப்படி அறிய முடியும்?

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று கூறுபவர்கள், கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை முன் வைக்கின்றார்கள். ''என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

இதுவும் கூட தவறான சிந்தனையாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் உருவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான் என்று தான் கூறினார்களே தவிர, மற்றவர்கள் உருவத்தில் ஷைத்தான் வந்து, தான் நபி என்று கூற மாட்டான் என்று ஒருபோதும் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தில் ஷைத்தான் வராவிட்டாலும் வேறு ஒருவரின் உருவத்தில் தோன்றி குழப்பதை விளைவிக்கலாம் அல்லவா!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தைப் பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளது. எனவே இந்த ஹதீஸ்களின் உதவியால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தைப் பார்க்க முடியுமல்லவா? அதைக் கனவில் காணலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது வெறும் யூகமே தவிர வேறொன்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தை எவ்வளவு கணிணிகளைப் பயன்படுத்தி வரைந்தாலும் சரியான முறையில் வரைய முடியாது. வரைந்தாலும் அது வெறும் கற்பனை தான். வரையப்பட்ட உருவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் உள்ளதா? என்பதை நம்மில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது. நபிகள் நாயகத்தை ஏற்கனவே கண்ட ஒருவர் தான் அதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அப்படி யாரும் நம்மில் கிடையாது.

ஹதீஸ்களில் வந்திருக்கும் வர்ணனைகளை வைத்து இப்படித் தான் இருப்பார்கள் என்று முடிவு செய்தாலும் கூட அதுவும் யூகம் தான். யூகத்தைப் பின்பற்றக் கூடாது என்று திருமறையும் நபிமொழியும் தெளிவாகவே கூறுகின்றன.

''உனக்கு உறுதியாகத் தெரியாததை நீ பின்பற்றாதே!'' (17:36) என்று திருக்குர்ஆனும், ''உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை விட்டு விட்டு சந்தேகத்தை ஏற்படுத்தாத விஷயத்தை முன்னோக்கு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள்.

இப்படியிருக்க நாம் கற்பனையாக ஓர் உருவத்தை வரைந்து விட்டு இது தான் நபிகள் நாயகம் என்று சொல்வது மாபெரும் குழப்பத்தை விளைவிக்கும். எனவே யூகத்தை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்பது இந்த ஹதீஸின் மூலம் நமக்குத் தெரிகின்றது.

''என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னை விழிப்பிலும் காண்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

இதுவும் தவறான வாதமாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரில் வருவார்கள் என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக்கும் குர்ஆனுக்கும் மாற்றமானதாகும்.

இறந்தவர்கள் திரும்ப வர முடியாது, நான் நல்லமல் செய்யப் போகின்றேன் என்று கெஞ்சினால் கூட அனுமதி கிடைக்காது என்று தான் குர்ஆன் கூறுகின்றது.

''என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன் 23:100)

இதுபோல் நல்லவர்கள் தனக்குக் கிடைத்த வெற்றியை தன் குடும்பத்தினரிடத்தில் சொல்வதற்கு அனுமதி கேட்டால் கூட அல்லாஹ் அனுமதி வழங்க மாட்டான் என்றும் மார்க்கம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் நினைவில் வருவார்கள் என்றால் அது குர்ஆன் கூறும் கருத்துக்கு மாற்றமாக உள்ளது.

யார் எப்போது நினைத்தாலும் உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்சி தருவார்கள் என்று நம்புவது இணை வைத்தலாகும். கிறித்தவர்கள் தான் இயேசு காட்சி தருவார் என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் சொல்லாததை நாம் சொன்னால் நமக்கும் கிறித்தவர்களுக்கும் வேறுபாடின்றிப் போய் விடுகின்றது.

எனவே கனவில் காட்சி தருவார் என்று சொல்வதை விட நினைவில் காட்சி தருவார் என்று கூறுவது மிகப் பெரிய பாவமாகும். விழிப்பிலும் என்னைக் காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் கருத்து, அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டாரேயானால், அவர் விழித்தபிறகு மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் இருக்க மாட்டார் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் சந்திப்பதற்கு, கனவு ஒரு அறிவிப்பாகத் தான் அந்த மக்களுக்கு இருந்தது.

இன்னும் சில நபர்கள், விழிப்பில் என்னைப் பார்ப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மறுமை நாளில் பார்ப்பார் என்று விளக்கம் கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும்.

ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தவர்கள் தான் பார்ப்பார்கள் என்றால் மற்ற நல்லவர்கள் எல்லாம் பார்க்க மாட்டார்களா? கனவில் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் எல்லோருமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறுமையில் பார்ப்பார்கள்.

இவ்வளவு வாதங்களும் பிரச்சனைகளும் ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தைக் கனவில் கண்டு விடுவதால் ஒரு மிகப் பெரிய பாக்கியம் இருக்கின்றது என்றால், நேரடியாக - கண்கூடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தை அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த அபூலஹப், அபூஜஹ்ல் ஆகியோர் எல்லாம் இஸ்லாத்தில் இணையும் பாக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது திருமுகத்தை நேரடியாகப் பார்த்துள்ள அபூலஹபை அல்லாஹ் சபித்து ஓர் அத்தியாயத்தை இறக்கி விட்டானே!

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாத்தின் ஆரம்பத்தில் ஓர் உறுதுணை இருந்தது என்று சொன்னால் அது அபூதாலி­ப் அவர்கள் தான்.    

அபூதா­லிப் உயிருடன் இருக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லா விஷயங்களிலும் மிக்க உறுதுணையாக நின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, நீங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று மட்டும் கூறி விடுங்கள். மற்ற அனைத்தையும் அல்லாஹ்விடம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள். இந்த அளவுக்கு நெருக்கத்தைப் பெற்று, ஒன்றோடு ஒன்றாக இருந்து அவர்களின் திருமுகத்தை நேரடியாகப் பார்த்த அபூதா­லிபிற்கே வெற்றி இல்லை என்றால் நபிகள் பெருமானாரை கனவில் பார்ப்பதனால் என்ன சிறப்பு இருக்கின்றது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதால் சிறப்பு கிடைக்கும் என்று நம்புவது எப்படி அறிவார்ந்த, சிறப்பம்சம் பொருந்திய காரியமாக ஆக முடியும்.

மவ்­லித் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகை தருகின்றார்கள் என்று நினைத்து, எழுந்து நின்று ஓதுவதை எப்படி தவறு என்று நினைக்கின்றோமோ அதே போன்று இதுவும் தவறாகும்.

இவ்வாறு அர்த்தமற்ற செயல்களைச் செய்வதாலோ சொல்வதாலோ எந்தச் சிறப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிப்படி நடப்பதில் தான் சிறப்பு இருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது தோழரிடத்தில், ''உங்களுக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் என்னைப் பார்க்காமலேயே என்னை ஈமான் கொண்டு செயல்படுவார்கள்'' என்று புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள். எனவே சிறப்பு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதை விடப் பின்பற்றுவதில் தான் இருக்கின்றது.

அல்லாஹ் தான் வ­லிமை மிக்கவன் ஆயிற்றே! அவன் தான் நாடியவற்றையெல்லாம் செய்பவன் அல்லவா! எனவே அவனிடம் நபிகள் நாயகத்தைக் கனவில் காட்டும் பாக்கியத்தைக் கேட்டால் அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமது கனவில் காட்ட முடியாதா? என்ற எண்ணம் கூட நம்மில் பலருக்கு ஏற்படும்.

பிரார்த்தனை என்றால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. இறந்தவர்கள் பூமிக்கு வர முடியாது என்று தெளிவாகக் கூறி விட்ட பிறகு அல்லாஹ்விடம், இறந்தவர்களை பூமிக்குத் திரும்ப அனுப்பு என்று கேட்பது மிகப் பெரும் தவறாகும்.

உதாரணமாக லஞ்சம் வாங்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கும் போது, அரசாங்கத்திடமே போய் லஞ்சம் வாங்குவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்பதை அறிவுக்குப் பொருத்தமான விஷயம் என்று யாரும் கூற மாட்டோம். லஞ்சம் வாங்கக் கூடாது என்று கூறிய அரசாங்கமே லஞ்சம் வாங்குவதற்கு அனுமதியளிக்குமா? அனுமதி வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால் கூட அவ்வாறு அனுமதி வழங்குவதில்லை.

இதுபோன்று இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்த முடியும். என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று திருமறையில் திட்டவட்டமாகக் கூறி விட்டான். இதன் பிறகும் நாம் அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்று நினைத்து யாரும் இது போன்ற பிரார்த்தனைகளை செய்யக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூட இவ்வாறு வரம்பு மீறி பிரார்த்தனை செய்வதைத் தடுத்துள்ளார்கள். ''உளூவிலும் பிரார்த்தனையிலும் வரம்பு மீறும் கூட்டம் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே இன்று மார்க்க அறிஞர்களே பிரார்த்தனையில் வரம்பு மீறுகின்றார்கள்.

பிரார்த்தனையில், ''இறைவா! எனக்குச் சுவனத்தில் வலது பகுதியைக் கொடு'' என்று கேட்பது கூட வரம்பு மீறுதலாகும் என்று ஹதீஸில் வந்துள்ளது. அப்படியிருக்க அல்லாஹ் தடுத்திருப்பதையே கேட்பது எவ்வளவு பெரிய வரம்பு மீறுதல் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் செய­ல் மட்டும் ஏகத்துவம் இருப்பது போதுமானதல்ல! மாறாக சொல்­லும் கூட ஏகத்துவம் இருக்க வேண்டும். சொல்­லும் செய­லும் ஏகத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக!

No comments:

Post a Comment